'மாயன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிப்பில் உருவான 'கரிசல்பட்டியும் காந்தி நகரும்' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா 22.02.13 வெள்ளிக்கிழமையன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல்களை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட ஆர்.ஆறுமுகம் IPS
(Inspector General of police ) பெற்றுக் கொண்டார்.ட்ரைலரை தயாரிப்பாளர் கலைப்புலி
எஸ் தாணு வெளியிட இயக்குனர்கள் v.சேகர்,பேரரசு,சீனு ராமசாமி,சுசீந்திரன்,பாண்டிராஜ்,பாலாஜி தரணிதரன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.விழாவில் கவிஞர் சினேகன் ,பாடலாசிரியர் தமிழமுதன், இசையமைப்பாளர் ஏ.எஸ். அன்புசெல்வன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் தங்கையா முருகேசன் வரவேற்று பேசினார். விழா முடிவில் இயக்குனர் B .கார்த்திகை முருகன் நன்றி கூறினார்.
விழாவில் பாரதிராஜா பேசியதிலிருந்து;-
“நான் இப்போது அதிகமாக பொது விழாக்களில் கலந்து கொள்வதில்லை. காரணம் எதையாவது பேசி அது வில்லங்கமாகி விடுகிறது. மேடையில் பேசும்போது ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று ஆரம்பிக்கிறேன். அதற்கு நீங்கள் கைதட்டுகிறீர்கள். சிலர் அதனை கிண்டல் செய்திருக்கிறார்கள். என் மண், என் மக்கள், அவர்களின் நான் அப்படி கூறாமல் யார் கூறுவார்கள்? என் மனம் சுத்தமானது. அதனால் அப்படிச் சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.
சோழக்காட்டிலும், கரும்புகாட்டிலும் கதை கேட்டவன், என் கிராமம், என் மக்கள், என் தெரு, பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு வளர்ந்தவன். நான் ஒன்றும் ஆக்ஸ்போர்ட் பல்லைகழகத்திலோ, வேல்ஸ் பல்கலைகழகத்திலோ படித்தவன் இல்லை. தமிழைப் படித்தவன், தமிழ் மக்களை படித்தவன்.
தமிழ், தமிழனின் அடையாளங்கள் அழிந்து விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இளைஞர்கள் கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்து மிரட்டுகிறார்கள். புதியவர்கள் விதவிதமான தளங்களில் நின்று விளையாடுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து பெரிய பெரிய கப்பல்கள் வரட்டும். ஆனால் அந்த கப்பலுக்கும் எங்கள் தரைக்கும் இணைப்பைத் தருவது எங்கள் தோணிகள்தான். என் மண்ணை அடையாளப்படுத்த அற்புதமான இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ‘16 வயதினிலே’ படத்தை பார்த்தேன். மூன்று நான்கு முறை கண்ணீர்விட்டு அழுது விட்டேன். அந்தப் படத்தை இயக்கிய இளைஞன் பாரதிராஜாவை பாராட்டினேன். இளைஞர்களை பாராட்டுவது என் குணம். 30 வருடங்களுக்கு பிறகு என் படங்கள் எனக்கே பிரமிப்பைத் தருகிறது. அதேபோல இன்றைய இளைஞர்களின் படம் 30 வருடங்களுக்கு பிறகு பிரமிப்பைக் கொடுக்கும்.
இன்றைய இளைஞர்களுக்கு துணிச்சல் அதிகம். இலக்கியத்தனம் அதிகம், நிறைய படித்து விட்டு வருகிறார்கள்., ஆனால் வியாபார அறிவு குறைவாக இருக்கிறது. அதுவும் இப்போது வளர்ந்து வருகிறது. ‘மெரீனா’, ‘நீர்ப்பறவை’, ‘நடுவுல கொஞ்சம பக்கத்தை காணோம்’, ‘அழகர்சாமியின் குதிரை’ படங்களை பார்த்து மிரண்டிருக்கிறேன். கிராமங்களிலிருந்து வருபவர்களால்தான் இப்படி ஈரத்தோடு கதை சொல்ல முடியும்.
ஒரு காலத்தில் சினிமா கற்கோட்டையாக இருந்தது. அதன் உள்ளே சாமானியர்கள் நுழைய முடியாது. நான் வந்தபோது ஏவிஎம் நிறுவனத்திலிருந்து கழுத்தைபிடித்து வெளியே தள்ளப்பட்டேன். இருங்க நானே உள்ள வர்றேன் என சவால் விட்டு பிற்காலத்தில் அந்த நிறுவனத்துக்கே படம் இயக்கினேன்.
இன்றைக்கு சினிமா ரொம்ப ஈசி.
கற்பனை திறன் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் இயக்குனர் ஆகலாம். நடிக்கத் தெரிந்தால் போதும் யார் வேண்டுமானாலும் நடிகர் ஆகலாம். முன்பு பிறமொழியினர்தான் தயாரிப்பாளர்களாக கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். இப்போது கிராமங்கிளிலிருந்தும் தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், சினிமா மிகவும் எளிமையாகிவிட்டது.
சினிமா கோட்டையின் கல்லை எடுத்துக் கொண்டுபோய் ஊர் ஊருக்கு ஸ்டூடியோ கட்டிவிட்டார்கள். மதுரையை சுற்றிலும் படப்பிடிப்பு நடக்கிறது. நானும் மதுரையில் ஸ்டூடியோ வைத்திருக்கிறேன். இனிவரும் காலங்கள் சினிமாவுக்கு சிறப்பானதாக இருக்கும்.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை இளைஞர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த கைதட்டல், புகழ் எல்லாமே அந்த நேரத்து போதை. அதை அப்போதே மறந்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும். அதற்குள் மூழ்கி விடக்கூடாது. 6 முறை தேசிய விருது வாங்கியிருக்கிறேன். அவைகள் எங்கே இருக்கிறது என்பதுகூட தெரியாது. காரணம் இது இறைவன் கொடுத்தது. நாங்கள் அண்ணன் தம்பி 4 பேர் கடவுள் என்னைத்தான் இயக்குனராக்கினான். நாம் வெறும் குழாய்கள் தண்ணீர் தருவது இறைவன். எனவே அனைத்து புகழையும், பாராட்டையும் இறைவனுக்கு கொடுத்து விடுங்கள். அதனை உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்”.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
No comments:
Post a Comment