Monday, June 28, 2010

“பேய்படங்களில் வேறொரு பிரச்சினை இருக்கிறது...”-"ஓர் இரவு "இயக்குநர்களின் பேட்டி


ஒவ்வொரு காலக்கட்டதிலும், அப்போதுள்ள தொழில்நுட்பத்தின் உச்சகட்டமாக சில திகில் படங்கள் மக்களை மிரட்டி மனதில் நீங்கா இடம்பெறும். அப்படிப்பட்ட படங்களின் வரிசையில், தற்கால தொழில்நுட்பத்திறனுடன் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது ‘ஓர் இரவு’ திரைப்படம். இப்படம், பார்வையாளர்களுக்கு ஒரு     புதியஅனுபவத்தை ஏற்படுத்தியதென்பது நிஜம்.
இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம் பார்ப்பவரின் கண்களிலிருந்தே காட்சிகளை விவரித்து காட்டும், ‘வியூபாய்ண்ட்’ முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் படம் பார்ப்பவரே இப்படத்தின் கதாநாயகனாக மாறி, ‘ஹீரோ’வுக்கு ஏற்படும் அனுபவத்தை நேரடியாக உணரமுடிகிறது. இதுவரை திரையில் மட்டுமே பார்த்து ரசித்த திகில் அனுபவத்தை காட்சிக்குள் சென்று உணர்வதற்கு இந்த வியூபாய்ண்ட் தொழில்நுட்பம் வழிவகுத்துக்குள்ளது.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என ஒட்டுமொத்த ஊடகங்களும் கொடுத்துள்ள விமர்சன பாராட்டுகளால் உற்சாகமடைந்துள்ளனர் இப்படத்தின் இயக்குனர்களாக ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர். அவர்களை சந்தித்துப் பேசியதிலிருந்து.

கேள்வி : முதல் படம் ஏன் திகில் படமாக எடுத்தீர்கள்..?

பதில் : பயம் அனவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான உணர்வு, 'எனக்கு பயமே கிடையாது' என்பவர்கள்கூட, பயம் தன்னை நெருங்கிவிடக்கூடாது என்ற ஒரு பயத்திலேயே இருப்பவர்கள்தான். அதனால், பயம் என்ற உணர்வு அனைவராலும், உலகளவில் புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு உணர்வு என்பதால், முதல் படத்தில் பயத்துக்கு நெருக்கமான திகில் என்ற விஷயத்தை தொட்டிருக்கிறோம்.

கேள்வி : மூன்று பேர் சேர்ந்து ஒரு திரைப்படத்தை இயக்கியது ஏன்..?

பதில் : 'ஓர் இரவு' போன்ற ரியாலிட்டியை அடிப்படையாகக் கொண்ட கதைக்கு அதிகபட்சமாக பர்பெக்ஷன் தேவைப்பட்டதாலும், இக்கதைக்கு பல துறைகள் சார்ந்த ஆய்வுகள் செய்யவேண்டியிருந்ததாலும், ஒரு தரமான தயாரிப்பு மேலும் தரமாக கிடைக்க எங்களுக்கு இந்த கூட்டு முயற்சி தேவையாகபட்டதாலும், நாங்கள் மூன்று பேரும் இணைந்து பணியாற்றினோம்.


கேள்வி : மூன்று இயக்குனர்கள் என்பதால் ஏதாவது பிரச்சினை வந்ததா..? எங்காவது ஈகோ மோதல்கள் முளைத்ததா..?

பதில் : பிரச்சினை, ஈகோ, செண்டிமெண்ட் இப்படி எந்த ஒரு விஷயமும் எங்களுக்குள் எள்ளளவும் வந்ததில்லை..! நாங்கள் மூவர் மட்டுமின்றி, எங்களுடன் பணியாற்றிய அத்தனை சக-வல்லுனர்கள் அனைவரின் குறிக்கோளும் திரைப்படம் சிறந்த முறையில் வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததே தவிர, எங்களுக்குள் யார் 'ஆக்ஷன்' 'கட்' சொல்வது போன்ற பிரச்சினைகள் வரவேயில்லை..! வரவும் வராது..!

 
கேள்வி : ஏன் இந்த கதையை வியூபாய்ண்ட்-ல் எடுத்தீர்கள்..?

பதில் : முதல் படம், பத்தோடு பதினொன்றாக இல்லாமல், மாறுபட்டதாக இருக்கவேண்டும், நாம் பிறர் படங்களில் பார்த்து ரசித்த விஷயங்களையே நாமும் மீண்டும் செய்துவிடக் கூடாது என்ற கவனம் இக்கதையை பேச ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே எங்களுக்குள் இருந்தது. அதனால், பார்க்கும் பார்வையாளர்களை வெள்ளித்திரையினுள் அழைத்து சென்று கதை சொல்லும் இந்த வியூபாய்ண்ட் என்ற புது யுக்தியை கையாண்டுள்ளோம்.

கேள்வி : இப்படத்தை இயக்கிய உங்கள் மூவரின் பின்னனி என்ன..?

பதில் : இப்படத்தின் தயாரிப்பாளரும், படத்தொகுப்பாளரும், இயக்குனருமான ஹரி ஷங்கர் என்பவர், திரு. நாகா, திரு. ராஜூ ஈஷ்வரன், திரு. ஆர்த்தி குமார் போன்ற இயக்குனர்களிடம், திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் இன்னொரு இயக்குனரான ஹரீஷ் நாராயண் என்பவர், தனியார் தொலைக்காட்சிகளுக்காக 'நம்பினால் நம்புங்கள்', 'சுழியம்' போன்ற மர்மத் தொடர்களையும், குறும்படங்களையும் இயக்கியுள்ளார், இப்பட்டத்தின் இன்னொரு இயக்குனரான கிருஷ்ண சேகர் என்பவர், திரு. முருகுபாண்டியன், திருமதி, ஜெயதேவி, போன்ற இயக்குனர்களிடம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

கேள்வி : இப்படத்தை ஷூட் செய்ய ஒளிப்பதிவாளர், ஒரு பிரத்யேக கேமிரா RIG-ஐ வடிவமைத்தது பற்றி..?

பதில் : வெளிநாடுகளில் மிலிட்டரியில் உளவுக்காக உபயோகப்படுத்தப்படும் ஒருவித ஸ்பெஷல் CAMERA RIG டிஸைனைப் பற்றி அறிந்து, அதே போன்ற ஒரு RIG வடிவத்தை, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சதீஷ். ஜி பிரத்யேகமாக தயாரித்துள்ளார். PV23 என்ற அந்த ரிக்-ஐ பயன்படுத்தி இப்படத்தின் வியூபாய்ண்ட் காட்சிகளை படம்பிடித்துள்ளார். இது போல் Handsfree-யாக கைகளை உபயோகப்படுத்தாமல் பெரும்பாலான காட்சிகள் ஷூட் செய்யப்பட்ட படம் இதுவே.

 
 கேள்வி : இது போன்ற படங்களில், கதாநாயகனின் முகத்தை கண்ணாடியில் காட்டுவார்களே? அது போன்ற காட்சியை ஏன் நீங்கள் எடுக்கவில்லை..?

பதில் : முன்னமே குறிப்பிட்டதுபோல், அடுத்தவர் செய்ததை நாம் மீண்டும் முயற்சிக்க வேண்டாம் என்று தோன்றியதால், இந்த காட்சியை தவிர்த்திருக்கிறோம். 1947-ல் வெளியான் வியூபாய்ண்ட் திரைப்படமான 'Lady in the Lake' என்ற ஆங்கிலப் படத்தில் இது போல் ஒரு காட்சி ஏற்கனவே உள்ளது. அந்தக் காலத்தில் இந்த காட்சி மிகவும் பேசப்பட்டது. ஆனால், இன்று அதையே மீண்டும் செய்தால் இது அரதப்பழசாக தோன்றும். மேலும், கதைக்கு அது தேவைப்படவில்லை..! எனவே அக்காட்சியை தவிர்த்துவிட்டோம்.



கேள்வி : இப்படத்தின் விசேஷ அம்சங்களில் ஒன்று ஒலியமைப்புக்கள், இந்த லைவ் சவுண்ட் பற்றி கூறுங்கள்...?

பதில் : ஒரு திரைப்படத்திற்கு ஒளி எந்தளவுக்கு அவசியமோ அதே போல் ஒலியும் மிகவும் அவசியம். மேலும், இது போன்ற ரியாலிட்டி அடிப்படையான படங்களுக்கு ஒலியும் யதார்த்தமாக இருத்தல் அவசியமாகிறது. அதனால், நம் காதுகளுக்குள் பதிவாகும் யதார்த்தமான டெஸிபல் அளவுகளை ஒளியின் சக்திக்கேற்ப, ஒலியையும் பதிவு செய்துள்ளோம். உதாரணத்திற்கு, கதை நடக்கும் களத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஒரு காட்சி நடக்கிறதென்றால், அதே 12 மணிக்கு அந்த வீட்டைச்சுற்றி என்னென்ன சப்தங்கள் என்னென்ன அளவில் கேட்குமோ, அதே சப்தங்களை அதே விகிதங்களுடன் பதிவு செய்துள்ளோம்.

கேள்வி : சிலர் இப்படத்தில் சவுண்டு தெளிவாக இல்லை என்று கூறுகிறார்களே அது பற்றி ..?

பதில் :இதுவரை சினிமாவில் மிகைப்படுத்தப்பட்ட ஒலியையேக் கேட்டு காட்சியைப் பார்த்து பழக்கப்பட்ட நம் ரசிகர்களுக்கு, நாங்கள் உபயோகித்திருக்கும் லைவ் சவுண்டு, பெரிய திரையரங்குகளில் பார்க்கும்போது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் இந்த கதைக்கு யதார்த்தத்தை பதிவு செய்ய இது தேவைப்பட்டது.


கேள்வி : இப்படி ஒரு வீட்டை எங்கே தேடிப் பிடித்தீர்கள்..?

பதில் : பேய்வீடு என்று இதுவரை நாம் சினிமாவில் எத்தனையோ வீட்டை பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் பேய் உலவுவதாக நம்பப்படும் வீடுகள் அப்படி இருப்பதில்லை...! இந்த படத்தில், உண்மையில் அமானுஷ்ய சக்திகள் ஆக்கிரமித்துள்ள வீடு எப்படி இருக்கும் என்பதை காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்பியதால், அப்படிப்பட்ட ஒரு வீட்டை தேடியலைந்து மூணாறில் கண்டுபிடித்தோம். இதற்காக, எங்களது லொகேஷன் மேனேஜர் திரு. நிக்ஸன் மிகவும் பிரயத்தனப்பட்டுள்ளார். அந்த வீட்டில் நாங்கள் இரவு வேளைகளில் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்திய அனுபவங்கள், எங்கள் குழுவில் யாரும் தனது வாழ்நாட்களில் எளிதில் மறந்துவிட முடியாது.

 
கேள்வி : நீங்கள் படப்பிடிப்பு நடத்திய அந்த அமானுஷ்ய வீட்டில் ஏதாவது திரில்லான சம்பவம் நடந்ததா..?

பதில் : பேய்வீட்டில் ஷூட்டிங் என்றதும், எங்களனைவருக்குள்ளும் ஒருவிதமான கிலி இருந்தது உண்மைதான். இதில் பய(பீ)தீயை கிளப்பிவிடும்படி மேலும் சில விஷயங்கள் நடந்தது சுவாரஸ்யம். 7ஆம் நாள் அன்று இரவு ஷூட்டிங்கின் போது, சுமார் 2 மணியளவில் ஒரு விநோத சத்தம், வீட்டின் மாடிப்பகுதியிலிருந்து கேட்டது. முதலில் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். மீண்டும், அதே சப்தம் கேட்டது... இது எங்களை மேலும் கலவரப்படுத்தியது. எங்களில் யாருக்கும் மேலே சென்று அந்த சத்தத்திற்கான காரணமறியும் துணிவு(அப்போது) இல்லை..! ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தோம். அவ்வளவுதான், அன்று படப்பிடிப்பு படபடப்புடன் நடத்தும் கட்டாயம் ஏற்பட்டதால், ஷூட்டிங்கை அன்று மட்டும் நிறுத்திவிட்டோம். வெளியில் சென்று புற்களில் அமர்ந்துக் கொண்டு கேம்ப் ஃபயர் போல் தீமூட்டி, தேநீர் அருந்தியபடி நாங்கள் அனைவரும் ஜோக்குகளை பரிமாறிக்கொண்டு அன்றைய இரவைக் கழித்தோம். மறக்க முடியாத இரவு அது..! ஆனால் அடுத்த நாளிலிருந்து ஷூட்டிங் சுமூகமாக நடந்தேறியது.

கேள்வி : இந்த படத்திற்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு க்ளைமேக்ஸ் தேர்ந்தெடுத்தீர்கள்..?

பதில் : ஆன்மீக திரைப்படங்களில், ஒரு சின்ன பிரச்சினை உண்டு, அது எந்த மதக்கடவுளை சித்தரிக்கும் திரைப்படமோ, அந்த மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் பார்ப்பார்கள். ஆனால், பேய் படங்களில் இந்த வேற்றுமை ஒற்றுமை பிரச்சினை கிடையாது. ஆனால், வேறு ஒரு பிரச்சினை உண்டு அமானுஷ்யத்தை நம்புபவர்கள் நம்பாதவர்கள். என்ற இருவருமே இப்படத்தை விரும்பி பார்ப்பார்கள். காரணம், திகில் என்பது ஒரு அனுபவமாக அவர்கள் பார்க்க விரும்புவதுதான்.


நாங்கள் இந்த இரு சாராருமே இப்படத்தை பார்ப்பது போல் வடிவமைத்திருக்கிறோம். ஆனால், முடிவில் ஒரு தீர்வு என்ற ஒன்று சொல்ல வேண்டுமல்லவா..? அதனால், முடிவை ஒரு புதிர் போல ரசிகர்கள் கணிப்புக்கே விட்டிருக்கிறோம். இப்புதிருக்கான விடை, அதாவது, இப்படத்தில் நடந்தேறும் அந்த மெய்சிலிருக்கும் கடைசிக்காட்சியின் சாரத்தை, இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் காட்சியாக வைத்திருக்கிறோம். இரண்டாம் பாகம் கதை மேலும் வித்தியாசமாக ரசிகர்களின் பார்வைக்கு விரைவில் வந்து சேரும்.

கேள்வி : உங்கள் படத்தின் எடிட்டிங்கில் ஆவி உருவம் சிக்கியதாக ஒரு செய்தி வெளிவந்ததே..? அது உண்மையா..?

பதில் : நாங்கள் இப்படத்திற்காக, அமானுஷ்யங்களைப் பற்றிய ஆய்வுகளை படித்துக் கொண்டிருந்தபோது, 'வீடியோ ஆர்ப்ஸ்' என்ற ஒரு ‘ஆன்மத்துகள்’ விஷயத்தைப் பற்றி படித்தோம். அதாவது, 'ஆர்ப்ஸ்' என்பது இறந்தவர் ஆன்மாவின் ஒரு அடையாளம் என்றும், அது வெள்ளை நிறத்தில் தெளிவில்லா வட்டவடிவில் இருக்கும் என்றும், அங்குமிங்கும் காற்றில் சஞ்சரித்தபடி இருக்கும் என்றும், இதை இன்ஃப்ரா ரெட் கேமிராவில் பதிவு செய்யக்கூடும் என்றும் அறிந்திருந்தோம். ஆனால், நாங்கள் இதை முயற்சிக்கவில்லை...! படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங்கில் ஈடுப்பட்டிருந்தபோது, க்ளைமேக்ஸ் காட்சியில் இன்ஃப்ரா ரெட் கேமிராவில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியை எடிட் செய்யும்போது, எதேச்சையாக, இந்த வீடியோ ஆர்ப்ஸ் போன்ற ஒரு விஷயம் எங்கள் டேப்பில் பதிவாகியிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டோம். ஆனால், நாங்களாக இதுதான் ‘ஆன்மத்துகள்’ என்று முடிவெடுக்காமல், அதை வெளிநாட்டில், அமானுஷ்யங்களை ஆய்வு செய்யும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தோம். அவர்களிடமிருந்து எங்களுக்கு வந்த பதில் 50% சாதகமாக இருந்தது. எனவே அவர்கள் எங்களுக்கு கொடுத்த பதிலை நம் கதையின் க்ளைமேக்ஸ் காட்சியில் இணைத்துக் கொண்டோம். இதற்காக, வெளிநாட்டில் வசிக்கும் எங்களது நண்பர்கள் குழுவிடம் கலந்துரையாடி, இங்கிருந்தபடியே, வெப் கான்ஃபரன்ஸ் முறையில், அவ்வூரைச் சேர்ந்த ஒரு நடிகையை, வெளிநாட்டு பேராசிரியை பேட்டி அளிப்பது போல் நடிக்கவைத்து, அந்த காட்சியை படம்பிடித்து இறுதிக்காட்சிகளோடு இணைத்துள்ளோம்.

கேள்வி : இந்த படத்தை ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பினீர்களா..?

பதில் : நம்பினோம். ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக என்று நாங்கள் இப்படத்தை இயக்கவில்லை..! இப்படம், உலகிலுள்ள அத்தனை பேரும் பார்த்து உணரலாம். எந்த நாடு, எந்த மொழி பேசுபவரும், இப்படத்தை உணரலாம். பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகளும் இப்படத்தை பார்த்து உணரும்படி படைத்திருக்கிறோம். படம் பார்க்கும் பார்வையாளர்களின் ரசனையை குறைத்து மதிப்பிடாமல் இப்படத்தை தயாரித்துள்ளோம்.

கேள்வி : Docu-Fiction Format பற்றி..?

பதில் : Docu-Fiction அதாவது, ஆவணப்படம் போல் ஒரு புனைவுக்கதையை சொல்வது. உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை, நீங்கள் லைட்டிங் செய்து, பின்னனி இசையமைத்து பார்க்க முடியாது. கிடைத்த இடத்தில் அந்த விஷயங்களை ஷூட் செய்வதுதான் வழக்கம். அதுபோல், நடக்காத ஒரு விஷயத்தை, இதே பாணியில் ஷூட் செய்து ஆவணப்படம் போல் ஒளிபரப்பும்போது, பார்க்கும் பார்வையாளர்களுக்கு இது நிஜ சம்பவமோ என்ற உணர்வு உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். அதைத்தான் இக்கதையில் முயற்சித்திருக்கிறோம். எங்களிடம் இப்படத்தை பார்த்த பெரும்பாலானவர்கள் 'இது உண்மைச் சம்பவமா..?' என்று கேட்டார்கள். இதுவே இந்த யுக்திக்கு கிடைத்த வெற்றி..

கேள்வி : உங்கள் குழுவின் அடுத்த படம் என்ன? அதையும் 3 பேர் சேர்ந்து இயக்கும் எண்ணமா.
பதில் : இந்த கேள்விக்கான பதில் நாங்கள் அடுத்த செய்யவிருக்கும் கதையைப் பொறுத்தது. மூன்று பேராகத்தான் எங்களால் எல்லாப் படத்தையும் இயக்கமுடியும் என்ற வரையரைக்குள் நாங்கள் சிக்க விரும்பாததால், இது கட்டாய விதியாக கருத முடியாது. அடுத்த கதைக்கும் எங்கள் மூவரின் உழைப்பு தேவைப்பட்டால், கண்டிப்பாக எந்த சந்தேகமுமின்றி மூவர் சேர்ந்து பணியாற்றுவோம். இல்லையென்றாலும், அதே திரைப்படத்தின் வேறு துறைகளில் எங்கள் பங்கு நிச்சயமிருக்கும். அடுத்த திரைப்படமும் ஒரு மாறுபட்ட தரமான படைப்பாக இருப்பதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் எடுத்து ரசிகர்களுக்கு ஒரு வித்தியாச விருந்து படைப்போம். நன்றி! வணக்கம்!

No comments:

Post a Comment